தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சபில்குடா பகுதியில் அமைந்துள்ள கட்டா மைசம்மா கோவிலில், நபர் ஒருவர் புனிதமான சாமி சிலையின் முன் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாப் (26) என்ற அந்த இளைஞர், கோவிலுக்குள் நுழைந்து இத்தகைய அநாகரிகமான செயலில் ஈடுபட்டதைக் கண்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் உடனடியாக அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததை அடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
புனிதமான வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்தன. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
