பங்களாதேஷில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், சுனாம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் மஹாபத்ரோ என்ற இந்து நபர், உள்ளூர்வாசி ஒருவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டாலும், இது திட்டமிட்ட கொலை என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தத் துயரம் நிகழ்ந்த சில நாட்களுக்கு முன்புதான், மிதுன் சர்க்கார் (25) என்ற இளைஞர், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலால் துரத்தப்பட்டபோது, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கால்வாயில் குதித்து நீரில் மூழ்கிப் பலியானார்.

மேலும், கடந்த மாதம் மைமென்சிங் மாவட்டத்தில் தீபு சந்திர தாஸ் என்ற ஆடைத் தொழிலாளி, ‘மத நிந்தனை’ செய்ததாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளையே உலுக்கியது.

தற்போது இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான யாசின் அராஃபத் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய கொலைகளால் பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.