தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் பேருந்தை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்து சோதனையிட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பனையூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற விஜய்யின் பிரச்சார வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதனைத் தங்கள் வசப்படுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், அந்த வாகனத்தின் ஓட்டுநரிடமும் அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய்க்கு சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
