டெல்லி – மீரட் இடையே இயங்கும் அதிவேக ரயிலில் (RRTS) அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட ஜோடிக்கு, தற்போது குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அடுத்த வாரமே திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி – மீரட் இடையிலான ஆர்.ஆர்.டி.எஸ் (RRTS) ரயிலில் இளம் ஜோடி ஒன்று பயணிகளிடையே அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. மோடிநகர் – மீரட் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, சக பயணிகள் இருப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த ஜோடி முத்தமிட்டும், போர்வையால் போர்த்திக்கொண்டு உடலுறவிலும்  ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்றது. இதையடுத்து, உத்தரப்பிரதேச காவல்துறையும், தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகமும் (NCRTC) தீவிர விசாரணையில் இறங்கின. ரயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீடியோவில் இருந்த ஜோடியின் அடையாளம் கண்டறியப்பட்டதை அடுத்து, இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு வாரத்திற்குள்ளேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் தேதியும் குறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ரயிலுக்குள் எடுக்கப்பட்ட உள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் எப்படி இணையத்தில் கசிந்தது என்பது குறித்தும், தனியுரிமை மீறல் ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.