தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2025/26 எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு அன்று நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டையில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் அபாரமாகச் செயல்பட்ட ஜோஹன்னஸ்பர்க் அணி, டர்பன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்துப் பேசிய ஜோஹன்னஸ்பர்க் கேப்டன் டூ பிளெசிஸ், இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதுர்யமான யுக்திதான் தங்களுக்கு உதவியதாகத் தெரிவித்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது தோனி செய்ததைப் போலவே, பந்துவீச்சாளர் வியான் முல்டரிடம் பேட்ஸ்மேனைச் சுற்றி பந்து வீசச் சொன்னதாகவும், அந்தத் திட்டம் கச்சிதமாகச் செயல்பட்டு விக்கெட்டைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
