சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், குளிரில் இருந்து தப்பிக்க உடல் முழுவதும் வைக்கோலைச் சுற்றிக்கொண்டு, எரியும் நெருப்புடன் பைக் ஓட்டிய நபரின் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களைச் செய்து வருகின்றனர். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் வைக்கோலைச் சுற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்.

அதிர்ச்சியூட்டும் வகையில், அந்த பைக்கின் கைப்பிடியின் இருபுறமும் நெருப்பு எரியும் பானைகளைக் கட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, இருக்கைக்குப் பின்னாலும் ஒரு நெருப்புப் பானையை வைத்துக்கொண்டு, தலையில் தகர டப்பாவைக் கட்டி அதிலும் தீப்பிழம்புகள் வருமாறு செய்துள்ளார். பார்ப்பதற்கே பயங்கரமான இந்தக் காட்சி, எந்த நேரத்திலும் பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 

இந்த 13 விநாடி வீடியோவை @brijeshchaodhry என்ற எக்ஸ்பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த நபரின் முட்டாள்தனமான செயலைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “ஒரு ரீல்ஸுக்காக இவ்வளவு பெரிய ஆபத்தா? வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது சகோதரரே!” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “இவர்தான் உள்ளூர் ‘கோஸ்ட் ரைடர்’ (Ghost Rider)” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் புகழுக்காகத் தங்கள் உயிரையே துச்சமாக நினைக்கிறார்கள்” எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், உயிருக்கு ஆபத்தான முறையிலும் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இத்தகைய ஆபத்தான செயல்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும், உயிரைப் பணயம் வைத்து ‘ரீல்ஸ்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.