பிரபல ஹாலிவுட் நடிகரும், ‘தி வயர்’ (The Wire) தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகப்புகழ் பெற்றவருமான இசியா விட்லாக் ஜூனியர் (Isiah Whitlock Jr.), செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 71.

அவரது மறைவு குறித்து விட்லாக்கின் மேலாளர் பிரையன் லீப்மேன் கூறுகையில், “நியூயார்க்கில் வசித்து வந்த விட்லாக், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்,” எனத் தெரிவித்தார்.

உலகளவில்புகழ்  பெற்ற ‘தி வயர்’ தொடரில், ஊழல் நிறைந்த மாநில செனட்டர் ‘கிளே டேவிஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் விட்லாக். குறிப்பாக, அந்தத் தொடரில் அவர் உச்சரிக்கும் “ஷீ-இட்” (She-it) என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பிரபல இயக்குநர் ஸ்பைக் லீயின் படங்களில் விட்லாக் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்தார். 2002-இல் வெளியான ’25th Hour’ திரைப்படத்தில் தொடங்கி, ‘She Hate Me’ (2004), ‘Red Hook Summer’ (2012), ‘Chi-Raq’ (2015), ‘BlacKkKlansman’ (2018) மற்றும் ‘Da 5 Bloods’ (2020) என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

விட்லாக்கின் மறைவு குறித்து இயக்குநர் ஸ்பைக் லீ விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:
“இது ஒரு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு. எனது வாழ்நாள் முழுவதும் அவரது நினைவுகள் என்னோடு இருக்கும். முதல் சந்திப்பிலேயே எங்களது நட்பு ஆழமானது. ‘டா 5 பிளட்ஸ்’ படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் அவருடன் கழித்த தருணங்கள் என்றும் பசுமையானவை,” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்’ திரைப்படத் திரையிடலில் விட்லாக்கை கடைசியாகச் சந்தித்ததையும் ஸ்பைக் லீ நினைவு கூர்ந்துள்ளார். விட்லாக்கின் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.