திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை “என்ஜின் இல்லாத கார்” என்று வர்ணித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் காரை கூட்டணி என்ற லாரி தான் இழுத்துச் செல்வதாகவும், தற்போது அந்தக் கூட்டணியிலும் புகைச்சல் ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் சாடினார். அதிமுகவை மதவாதக் கட்சி என்று விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்த அவர், 1999 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்திருந்த வரலாற்றை நினைவுபடுத்தினார்.
தனது பேச்சின் போது மறைந்த தலைவர்கள் கருணாநிதி, வாஜ்பாய் மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, அன்று பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அது நல்ல கட்சியாகத் தெரிந்ததா எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக பச்சோந்தி போல நிறம் மாறுவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தாக்குதல் அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
