நவி மும்பையில் தன் 6 வயது மகளை மராத்தி பேசவில்லை என்ற காரணத்திற்காகக் கழுத்தை நெரித்துக் கொன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாம்போலி பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண், ஆரம்பத்தில் தன் மகள் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கையில் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அறிவியல் பட்டதாரியான அவர், ஒரு மென்பொருள் பொறியாளரைத் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு நீண்டகாலமாக மனநலப் பாதிப்புகள் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமிக்குச் சிறுவயதிலிருந்தே பேச்சுத்திறன் குறைபாடு இருந்த நிலையில், அவளால் மராத்தி மொழியைச் சரியாகப் பேச முடியவில்லை என்பது தாயின் ஆத்திரத்திற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற அதிருப்தியும், குடும்பச் சிக்கல்களும் அவரை இந்தத் துயரமான முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
