மும்பை தார்டியோ பகுதியில் உள்ள ஒரு நகராட்சிப் பூங்காவில், சீருடையில் இருந்த காவலர் ஒருவர் மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பூங்காவில், குறிப்பிட்ட காவலர் அப்பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபடுவதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
View this post on Instagram
இது தொடர்பான வீடியோ காட்சியில், அந்தப் போலீஸ்காரர் தான் தவறு செய்துவிட்டதாகவும், இந்த விஷயம் தெரிந்தால் தனது பிள்ளைகள் தன்னை வீட்டை விட்டுத் துரத்திவிடுவார்கள் என்றும் கூறி கதறி அழுவதுடன், பொதுமக்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதும் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தார்டியோ போலீசார், குற்றம் சாட்டப்பட்ட காவலரை உடனடியாகக் கைது செய்தனர்.
சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
