தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் பயன்படுத்திய ‘க்ரோவெல்’ (Grovel) என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி உறுதியான நிலையிலும், இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கில் வேண்டுமென்றே டிக்ளர் செய்யத் தாமதித்ததாக அவர் கூறியது இனவெறி மற்றும் மட்டப்படுத்தும் தொனியில் இருந்ததாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த காலத்தில் இங்கிலாந்து கேப்டன் இதே வார்த்தையைப் பயன்படுத்தி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் பதிலடி வாங்கிய வரலாற்றை இந்திய ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த விவகாரம் குறித்து தற்போது மனம் திறந்துள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா, தனது பயிற்சியாளர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது முறையற்றது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வார்த்தையின் பின்னணியைக் கேட்டபோது தனக்கே அது கசப்பான உணர்வைத் தந்ததாகவும், பயிற்சியாளர் இன்னும் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பவுமா தெரிவித்துள்ளார். இறுதியில் ஒருநாள் தொடரின் போது சுக்ரி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
