சென்னை அயனாவரம் பகுதியில் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண் பல் மருத்துவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (57) என்பவர் தனது செல்போன் மூலம் ரகசியமாகப் படம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி கழிவறை ஜன்னல் வழியாக நந்தகுமார் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், இதுகுறித்து தனது தாயாரிடம் முறையிட்டதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
முதலில் வழக்குப் பதிவு செய்ய காவல்துறை தாமதித்ததாகக் கூறப்படும் நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நந்தகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போலீஸார், அதில் அதே பெண்ணின் 10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
