குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள நந்தேசரி மேம்பாலத்தில் (Nandesari Bridge) நடந்த ஒரு விபத்து, காண்போரை உறைய வைத்துள்ளது. ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தராஜ் சிங் மகிதா (20) என்ற வாலிபர் தனது ஸ்கூட்டரில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அதிவேக கார் ஒன்று பலமாக மோதியது.

இந்த மோதலில் நிலைதடுமாறிய அவர், பாலத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி கீழே விழப் போனார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் அணிந்திருந்த சட்டை, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த ஒரு ஆணியில் மாட்டிக் கொண்டது.

சுமார் 20 அடி உயரத்தில் அந்தரத்தில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த அந்த வாலிபரைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனடியாக ஓடி வந்து அவரது கையைப் பிடித்து மேலே தூக்கிக் காப்பாற்றினர்.

இந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது பெரும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற கார் டிரைவரை போலீஸார் சிசிடிவி காட்சிகள் மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உயிரிழப்பின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த அந்த வாலிபர், “இந்த உயிர்பிழைப்பு தனக்குக் கிடைத்த மறுபிறவி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.