தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களம் காண்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்ள வசதியாக, அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை வடிவமைப்பதில் கோவை மாநகரம் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களுக்குப் பிரசார வாகனங்களைத் தயாரித்து வழங்கிய பாரம்பரியமிக்க கோவையின் பட்டறைகள், தற்போது அண்டை மாநிலத் தலைவர்களின் வாகனங்களையும் தயாரித்து வருகின்றன.

இந்த ஆண்டு வடிவமைக்கப்படும் வாகனங்களில் வழக்கமான சுழலும் இருக்கைகள் மற்றும் ஹைட்ராலிக் லிப்ட் வசதிகளுடன், தொழில்நுட்ப ரீதியாகப் பல புதிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பதிவு செய்ய கணினி மற்றும் பிரிண்டர் வசதி, தலைவர்கள் ஓய்வெடுக்க ஏசி வசதியுடன் கூடிய அறை, பயோ கழிப்பறை மற்றும் துல்லியமான ஒலியை வெளிப்படுத்தும் நவீன ஒலிப்பெருக்கிகள் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உதவியாளர்களுடன் ஆலோசிக்கத் தனி சோபா வசதி கொண்ட அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த சொகுசு வாகனங்கள், தலைவர்கள் மக்களை நெருங்கிச் சென்று வாக்குச் சேகரிக்க ஏதுவாக இருப்பதால், அரசியல் கட்சியினர் கோவையில் தங்களது வாகனங்களை வடிவமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.