துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியும், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தைத் தோற்கடித்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், மகுடத்துக்கான இறுதி ஆட்டம் இன்று (டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு துபாய் ஐசிசி அகாடமி மைதானத்தில் தொடங்குகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 11 ஆண்டுகள் கழித்து இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி 9-ஆவது முறையாகக் கோப்பையை வெல்லக் களம் காண்கிறது.
