உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி, கடும் பனிமூட்டம் மற்றும் நச்சுப்புகை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
புதன்கிழமை மாலை போட்டி தொடங்கவிருந்த நிலையில், மைதானத்தை மூடிய அடர்த்தியான புகை மண்டலத்தால் வீரர்களுக்குப் பார்வைத் திறன் குறைபாடு ஏற்பட்டதுடன், சுவாசப் பிரச்சினைகளும் எழுந்தன. நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், நிலைமை சீராகாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Hardik Pandya spotted wearing a mask ahead of the match in Lucknow. The current AQI in Lucknow is 490 (hazardous). It’s downright dangerous for people to be playing sport in such conditions. pic.twitter.com/rlZodZKC6t
— Nikhil Naz (@NikhilNaz) December 17, 2025
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முகக்கவசம் அணிந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், வட இந்தியாவில் நிலவும் கடுமையான குளிர் மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொள்ளாமல் போட்டியைத் திட்டமிட்ட இந்தியக் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
லக்னோவில் காற்றின் தரக் குறியீடு நானூறைத் தாண்டிய நிலையில், வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
