பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த 34 வயது கேரேஜ் மெக்கானிக் வெங்கடரமணன் என்பவர், உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காததாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும் உயிரிழந்த சோகச் சம்பவம் மனிதநேயமற்ற செயலாகச் சித்திரிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது மனைவி அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளார்.

 

ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்றும், மற்றொன்றில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிச் சிகிச்சை அளிக்க மறுத்து வேறு இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவையும் உரிய நேரத்தில் கிடைக்காததால், இருவரும் இருசக்கர வாகனத்திலேயே வேறு மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கினர்.

சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தனது கணவரைக் காப்பாற்றக் கோரி, அவரது மனைவி அவ்வழியே சென்ற வாகனங்களை கைகூப்பித் தடுத்து நிறுத்தியும், பல நிமிடங்கள் யாரும் உதவ முன்வராதது காண்போரை நெகிழச் செய்துள்ளது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வாடகை கார் ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இத்தகைய பேரிழப்பிலும், மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் வெங்கடரமணனின் கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.