கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சி.பி.எம். கட்சியின் பிராந்தியத் தலைவர் சயீத் அலி மஜீத், தென்நாள பஞ்சாயத்து வார்டில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் வெற்றிக்குப் பின் ஆற்றிய உரையில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக சி.பி.எம். கட்சியின் உள்ளூர் செயலாளர் பதவியில் இருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிட்ட மஜீத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) வேட்பாளரை வீழ்த்தி 666 வாக்குகள் பெற்றார்.
தனது வெற்றிக் கொண்டாட்டத்தின்போது அவர் பேசுகையில், திருமணத்தின் மூலம் குடும்பத்திற்குள் வரும் பெண்களை வாக்கிற்காக அல்லது தன்னைப் அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக அன்னியர்கள் முன் நிறுத்தக் கூடாது என்று கூறினார். மேலும், பெண்கள் தங்கள் கணவர்களுடன் இருப்பதற்கும் அல்லது படுத்து உறங்குவதற்கும் மட்டுமே என்று மறைமுகமாகப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே கோபத்தை எழுப்பியுள்ளது. இது பொது வாழ்வில் கண்டிக்கத்தக்கது என்று பலரும் விமர்சித்துள்ளனர். அத்துடன், ஐ.யூ.எம்.எல்-லின் பெண்கள் பிரிவான மகளிர் லீக் தலைவரின் சமீபத்திய வீடியோவைக் குறிப்பிட்டு, அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவு இல்லாதவர்கள் வீட்டில் ‘வீட்டு மனைவிகளாக’ இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கள் பாலின பேதம் மற்றும் பெண்களுக்கு எதிரான அவமதிப்பு என்ற குற்றச்சாட்டுகளை மேலும் அதிகரித்துள்ளன. இதுவரை, சயீத் அலி மஜீத்தின் இந்தக் கருத்துகள் குறித்து சி.பி.எம். தலைமை எந்தவித அதிகாரப்பூர்வப் பதிலும் அளிக்கவில்லை.
