சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா ரமேஷ் மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில், அவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிருடன் இருந்தும், இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டுத் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாகக் கூறி இந்துஜா ரமேஷ் ஆட்சியரிடம் முறையிட்டார். இதற்குப் பதிலளித்த ஆட்சியர், “ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பட்டியலை நாங்கள் உங்கள் கையில் கொடுத்திருக்கிறோம். தவறு நடந்தால் ஊழியர்கள் மீதுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று விளக்கம் அளித்தார்.

எனினும், வாக்குவாதம் தொடர்ந்ததால் ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குடும்பத்தின் பெயர் நீக்கப்பட்ட இந்தச் சம்பவம் சிவகங்கை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.