கர்நாடகத்தைச் சேர்ந்த சத்யா சங்கர் என்பவரின் வாழ்க்கை கதை, ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநராகத் தொடங்கி இன்று கோடிக்கணக்கில் மதிப்புள்ள பெரிய நிறுவனத்தின் உரிமையாளராக மாறியிருக்கும் எழுச்சிமிகு கதை, பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது. ஏழ்மையான கிராமத்து அர்ச்சகரின் மகனாக 1964ஆம் ஆண்டு பிறந்த இவர், நிதிப்பற்றாக்குறையால் பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினார்.

பதினெட்டு வயதில், 1984ஆம் ஆண்டு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் உரிமம் பெற்று, கடன் வாங்கி ஒரு ரிக்‌ஷாவை வாங்கினார். பெங்களூருவின் வீதிகளில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திய அவர், தனது லட்சியத்தை அடைய இதை ஒரு அடித்தளமாக மட்டுமே பயன்படுத்தினார். கடனை அடைத்தபின், அடுத்தகட்டமாகச் சுற்றுலாப் பயணிகளை மாவட்ட, மாநில எல்லைகளுக்கு அப்பால் ஏற்றிச் செல்ல ஒரு அம்பாசிடர் காரை வாங்கித் தனது தொழிலை விரிவுபடுத்தினார்.

இதில் மட்டும் திருப்தியடையாத சத்யா சங்கர், பிரவீன் ஆட்டோமொபைல் என்ற பெயரில் ஆட்டோ உதிரிபாகங்கள் வணிகத்தைத் தொடங்கினார். அப்போது பெற்ற தொழில் அனுபவத்தைப் பயன்படுத்தி, 1994ஆம் ஆண்டு பிரவீன் கேப்பிட்டல் என்ற வாகன நிதி நிறுவனத்தை நிறுவினார். இப்போது எஸ்ஜி குழுமத்தின் நிறுவனராக இருக்கும் இவர், தட்சிண கன்னடாவின் புத்தூர் நகரத்தை மையமாகக் கொண்டு தனது வணிகத்தை நடத்துகிறார்.

ஆரம்பத்தில் 35 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்தக் குழுமம், இன்று ரூ. 800 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ளது. தண்ணீர் பாட்டில்கள் முதல் குளிர்பானங்கள், தின்பண்டங்கள் என 55க்கும் மேற்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துகிறது. குறிப்பாக, இவர்களின் ‘பிந்து ஃபிஸ் ஜீரா மசாலா’ என்ற குளிர்பானம் மிகவும் புகழ்பெற்றது.

ஒரு காலத்தில் ஆட்டோ ஓட்டிய சத்யா சங்கர், தற்போது ரூ. 11 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் காரில் பயணம் செய்கிறார். ஒரு சிறிய யோசனைக்கூட வெற்றியை அடையப் போதும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.