அமெரிக்காவின் வர்ஜீனியாவில் (Virginia) உள்ள ஆஷ்லேண்ட் (Ashland) என்ற மதுபானக் கடையின் ஊழியர்கள், சனிக்கிழமை காலை கடைக்கு வந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாகக் கழிவறையில் மயங்கிக் கிடந்த ஒரு விருந்தாளியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த விருந்தாளி வேறு யாரும் அல்ல, கடைக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பல்வேறு மதுபானங்களை அருந்தியதால் போதை தலைக்கேறி மயக்கமடைந்த ராகூன் (Raccoon) என்ற விலங்குதான்.

ஹனோவர் கவுண்டி விலங்குப் பாதுகாப்பு மைய (Hanover County Animal Protection) அதிகாரிகள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கடைக்குள் நுழைந்த ராகூன் பல அலமாரிகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, பின்னர் கழிவறையில் போதையில் இருந்ததாகக் கூறியுள்ளனர்.

அந்த ராகூனுக்குக் காயம் ஏதும் இல்லை என்றும், அது “மிகவும் குடிபோதையில்” இருந்ததாகவும் உறுதிப்படுத்தினர். அந்த விலங்கு பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சில மணிநேரங்கள் ஓய்வெடுத்தப் பிறகுப் போதை தெளிந்ததும், மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி, பேசுபொருளாக மாறியுள்ளது.