பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கொண்டனஹள்ளி கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி பகுதியளவு எரிந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் மர்மநபர்கள் வேறு இடத்தில் கொலை செய்து, பின்னர் அந்த உடலை கங்கொண்டனஹள்ளிக்கு கொண்டு வந்து எரித்திருப்பது போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் வெளிச்சத்துக்குவந்தது.

இதையடுத்து நடந்த தொடர்ந்து விசாரணையில், பேடரஹள்ளி போலீசில் பசவராஜ் (28) என்ற சுரேஷ் என்பவர் மாயமாகியுள்ளதாக அவரது மனைவி சரணம்மா அளித்திருந்த புகார், இந்த வழக்குடன் தொடர்புடையது என போலீசாருக்கு தெரியவந்தது. சரணம்மாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையின் பின்னணி பரபரப்பாக அம்பலமானது.

அதாவது யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ் – சரணம்மா தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கர்ணாடகாவின் திகளரபாளையம் பகுதியில்தங்கி கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்த்தனர். இந்த இடத்தில்தான் கட்டிட மேஸ்திரியின் 19 வயது மகன் வீரபத்ராவுடன் சரணம்மாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

அந்த தொடர்பு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. மனைவியின் சந்தேகமான நடத்தை காரணமாக பசவராஜ் அவளை கண்காணிக்கத் தொடங்கினார். சில தினங்களுக்கு முன் வீரபத்ராவுடன் சரணம்மா உல்லாசமாக இருந்ததை பசவராஜ் நேரில் கண்டு கண்டித்ததும், இருவரும் அவர் மீது விரோதம் கொண்டனர்.

இதனால் கடந்த 19ஆம் தேதி மது அருந்தி உறங்கிக் கொண்டிருந்த பசவராஜின் தலையில் சரணம்மா மற்றும் வீரபத்ரா கல்லை போட்டு தாக்கினர். பின்னர் கழுத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். இதற்காக அனில் (19) எனும் நண்பரையும் கூட்டிணைத்து, சடலத்தை காரில் ஏற்றி கங்கொண்டனஹள்ளிக்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். மறுநாள் மீண்டும் அதே இடத்துக்கு சென்று சடலம் அங்கேயே உள்ளதா என வீரபத்ரா – அனில் பார்த்துச் சென்றதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார், சரணம்மா, வீரபத்ரா (19), அனில் (19) என்ற மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் மூவர்மீதும் கொலை, சாட்சியம்  மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.