கரூர் கூட்டத்தில் நடந்த அசம்பாவித சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று (நவ. 23) காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இதில், ஆளும் கட்சியான திமுகவை மறைமுகமாகக் கடுமையாகச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய விஜய், “அண்ணாவிடம் இருந்து கட்சியை கைப்பற்றிய ஒரு கும்பல் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என்று திமுகவை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்தார். மேலும், “வாக்குகளை வாங்கி அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் வன்மத்துடன் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது. மக்களுக்காகப் பாடுபடவே இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளேன்” என்றும் தொடர்ந்து சாடினார். விஜயின் இந்தக் கருத்து, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், திமுகவுக்கு எதிரான நேரடி அரசியல் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.