பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள மோதிப்பூர் நகர சபை, நேதா சாலைப் பகுதியில் நடந்த கோரமான தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சிக்கிக்கொண்டதில், 5 பேர் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம், அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் லலன் சாஹ் என்பவரது வீட்டின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்ததால் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், லலன் சாஹ், அவரது மனைவி பூஜா, இரண்டு மகள்கள் மற்றும் லலன் சாஹின் தாயார் சுஷிலா தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், லலன் சாஹின் ஒரு மகள், ஒரு மருமகள், மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட 4 பேர் 70-80% தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு, SKMCH அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, போலீசார் மற்றும் FSL குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.