நடிகை மற்றும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யின் அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் லெனின் பாண்டியன் படத்தில் நடித்திருக்கும் ரோஜா, அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது என்பதெல்லாம் சினிமாவில்தான் முடியும், நிஜ அரசியலில் முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள்; நடிகர்களெல்லாம் அரசியல் செய்கிறார்கள்” என்றும் அவர் கூறினார். இதன் மூலம், முதல்வராகப் போவதாகக் கூறும் விஜய்யை மறைமுகமாக ரோஜா சாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பேசிய ரோஜா, நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், “விஜய் நேரில் சென்றதால் தான் இந்தப் பிரச்சனை என்று சிலர் திட்டுகிறார்கள். அவர் செல்லவில்லை என்றாலும் திட்டுகிறார்கள்” என்று கூறினார். மேலும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “தமிழக அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், அத்திட்டங்களால் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தேர்தலுக்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நிலவும் அரசியல் சூழல்தான் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்” என்று தனது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் ரோஜா கருத்துத் தெரிவித்தார்.