ராவல்பிண்டி: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (நவ. 13) அதே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையில், இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் பலியானதால், அங்கு தொடர்ந்து விளையாடுவது குறித்து இலங்கை வீரர்களிடையே பாதுகாப்பு அச்சம் நிலவியது.

இதனால், 8 இலங்கை வீரர்கள் பாதுகாப்பு கவலை காரணமாக உடனடியாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.
வீரர்களின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு குறித்து அவசரமாக ஆலோசனை நடத்தினார். அப்போது, இலங்கையின் வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மொசின் நக்வி உறுதியளித்தார்.
மேலும், அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த உத்தரவிட்டதுடன், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தினார். மொசின் நக்வி நாடு திரும்ப விரும்பிய இலங்கை வீரர்களைச் சந்தித்து, அச்சமின்றி விளையாடக் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், தொடரில் இருந்து பாதியில் வெளியேறக் கூடாது எனவும், திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் வீரர்களை எச்சரித்துள்ளது என்ற பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.
