மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணம், மகிழ்ச்சி நிறைந்த விழாவாக இருக்க வேண்டிய நேரத்தில், பயங்கரமான இரவாக மாறியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு, திருமண மேடையில் வைத்து மணமகன் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஜல் ராம் சமுத்ரா (22) என்பவரின் திருமணம் பத்நேரா சாலையில் உள்ள சஹில் லான் என்ற மண்டபத்தில் இரவு 9:30 மணியளவில் நடந்தபோது, இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ராகோ ஜிதேந்திர பக்‌ஷி என்பவர், மணமகனுக்கு அருகில் வந்து, மணமகள் மற்றும் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் கத்தியால் மணமகனின் தொடைகள் மற்றும் முழங்கால் பகுதியில் மூன்று முறை குத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை, திருமணப் பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட டிரோன் கேமரா அப்படியேப் படம் பிடித்துள்ளது. மேலும், ஆரஞ்சு நிற ஹூடி அணிந்திருந்த அந்தத் தாக்குதல் நடத்தியவர், ஓடிச் சென்று வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் ஏறித் தப்பிச் சென்றபோது, உடன் மற்றொருவரும் சேர்ந்து கொண்டார்.

அப்போது, அந்த டிரோன் கேமரா குற்றவாளிகள் இருவரும் பைக்கில் தப்பிச் சென்ற சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களின் தப்பிக்கும் பாதையையும் முகத்தையும் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இந்த டிரோன் காணொளியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதுவே, தற்போது வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது.