லண்டனைச் சேர்ந்த 34 வயதுப் பெண் ஒருவர், தன்னுடன் 10 ஆண்டுகள் உறவில் இருந்த முன்னாள் காதலரிடம் இருந்து, தனது “கருத்தரிக்கும் ஆண்டுகளைத் திருடிவிட்டதாகக்” கூறி, நிதியுதவி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகையின் “நெறிகள் சார்ந்த பணம்” என்ற பகுதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தனது 38 வயது காதலர், திருமணம் மற்றும் குழந்தை பேறுக்குத் தான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு, சமீபத்தில் உறவை முறித்துக்கொண்டதாகவும், இது தன்னை உணர்ச்சி ரீதியாக மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து குடும்பம் தொடங்குவோம் என்ற நம்பிக்கையில், அந்தப் பெண் தனது தொழில் வாழ்க்கையைத் தள்ளிப்போட்டதாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக இப்போது 34 வயதில் ஒற்றை ஆளாக நிற்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். “இப்போது எனக்கு 34 வயதாகிறது, தாயாகும் ஆவலுடன், திருமணம் மற்றும் பெற்றோர் ஆவதற்குத் தயாராக உள்ளேன்.
ஆனால் எதிர்பாராத விதமாக தனியாக விடப்பட்டுள்ளேன்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். எனவே, காதலரின் இந்த முடிவால் தனக்கு ஏற்பட்ட “சேதத்தை ஈடுகட்ட” அவர் ஐ.வி.எஃப். (IVF) சிகிச்சைக்கோ அல்லது கருமுட்டைகளை முடக்கி வைப்பதற்கோ (Egg-Freezing) ஆகும் செலவை முன்னாள் காதலர் தான் ஏற்க வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கை சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
