2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ‘அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க விரும்பவில்லை’ என்று மறைந்த ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) பொய் சொல்லிவிட்டார் என்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ பரபரப்பு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., “நான் ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் என்ன பேசச் சொல்கிறாரோ, அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறேன். இது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்., “அண்ணன் வைகோ மீது இன்றைக்கும் மிகுந்த மரியாதை, அன்பு, பாசம், பற்றை வைத்திருக்கிறேன். எனவே அவர் என்ன பேசினாலும், அவர் மீது மரியாதையோடுதான் இருப்பேன். நான் அவருக்குப் பதிலைச் சொன்னால், அவருடைய மனத்தைப் புண்படுத்தக்கூடும் என்பதால், அரசியல் நாகரீகம் கருதி நான் அந்தப் பிரச்சினைக்கு உள்ளே செல்ல விரும்பவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “14 ஆண்டுகள் கழித்து இப்போது அந்தப் பேச்சை வைகோ பேச வேண்டிய நிலை ஏன் வந்தது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து நான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால், அந்தப் பதிலைச் சொல்வேன்” என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
