சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த 38 வயது அஸ்மத் பாட்ஷா என்பவர், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் மதுபோதையில் பயணம் செய்துள்ளார்.

அதே ரயிலில், மெரினா கடற்கரையில் குதிரைச் சவாரி ஓட்டும் சுரேஷ் (38) மற்றும் சீனிவாசன் (52) ஆகிய இருவரும் பயணம் செய்தபோது, அஸ்மத் பாட்சாவிடம் இருந்த மது பாட்டில்களைப் பார்த்து அவருடன் நட்பாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து, மூவரும் சேர்ந்து சென்னை கடற்கரை – பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் இறங்கி மது குடித்துள்ளனர்.

மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதில், சுரேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இணைந்து அஸ்மத் பாட்ஷாவை சரமாரியாகத் தாக்கி, அவர் வைத்திருந்த துண்டைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். மேலும், அஸ்மத் பாட்ஷாவின் செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர்.

திருடிய செல்போனை ரயில் நிலையத்திலேயே விற்றுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. குடிபோதையில் செல்போனுக்காக நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீஸார் கண்காணிப்புக் கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், கொலையாளிகளில் ஒருவரான சுரேஷைக் கைது செய்துள்ளனர். மற்றொரு கொலையாளியான சீனிவாசனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.