தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வந்த 25 வயதுப் பெண் ஒருவர், மின் விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2022-ஆம் ஆண்டு திருமணமாகி, 3 வயதில் ஒரு மகள் உள்ள அந்தப் பெண், எறும்புகள் மீதான பயத்தால் (மிர்மிகோபோபியா – Myrmecophobia) தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்துக் காவல்துறையினர் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தற்கொலைக் குறிப்பில், “மன்னித்து விடுங்கள் ஸ்ரீ. இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அப்பெண் தெரிவித்திருந்ததாகக் கூறினர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அப்பெண் தனது மகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். காலையில் வேலைக்குச் சென்று திரும்பிய அவரது கணவர், வீடு பூட்டப்பட்டிருந்ததால் அண்டை வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டு அதிர்ச்சியடைந்தார். அந்தப் பெண் தூய்மை செய்தபோது எறும்புகளைப் பார்த்து, அந்த பயத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.