இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரை குறிவைத்து நடந்த ‘இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமை’ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், ஒரு மாதத்திற்கு முன்பு பிரிட்டிஷ் சிக்கள் பெண் ஒருவருக்கு எதிராக நடந்த அதேபோன்ற வன்கொடுமைக்கு பின் நிகழ்ந்துள்ளது.

வெஸ்ட் மிட்லாந்த்ஸ் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, வால்சாலின் பார்க் ஹால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு சாலையில் மன உளைச்சலில் இருந்த பெண்ணை கண்டதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது “இன அடிப்படையிலான தாக்குதல்” என போலீசார் அறிவித்துள்ளனர்.

குற்றவாளி 30 வயது மதிக்கத்தக்க ஆண். அவர் நிறமான  குறுகிய முடி, கருப்பு உடையில் இருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “இது ஒரு இளம்பெண்ணுக்கு எதிரான மிக அருவருப்பான தாக்குதல். குற்றவாளியை விரைவில் கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன,” என விசாரணையை மேற்பார்வையிடும் டிடக்டிவ் சூப்பிரண்டென்ட் ரோனன் டயர் தெரிவித்துள்ளார்.

 

அவரது தலைமையில் செயல்படும் குழுக்கள் சம்பவ இடத்தில் சான்றுகளை சேகரித்து, குற்றவாளியின் சுயவிவரத்தை உருவாக்கி வருகின்றன. அதே சமயம், அந்தப் பகுதியில் வாகன கேமரா அல்லது சிசிடிவி கொண்டுள்ள பொதுமக்கள் தங்கள் பதிவுகளை போலீசாரிடம் பகிருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். “அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான ஆணை பார்த்தவர்களோ, தங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடியவர்களோ எங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் தகவல் முக்கியமான தடயமாக அமையலாம்,” என டயர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், சிக் பெடரேஷன் யுகே அமைப்பு, உள்ளூர் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அந்த இளம்பெண் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளது.“கடந்த இரண்டு மாதங்களில் வெஸ்ட் மிட்லாந்த்ஸ் பகுதியில் 20 வயதுக்குட்பட்ட இரு இளம் பெண்கள் இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” எனக் கூறியுள்ளது.

லேபர் கட்சி எம்.பி. ப்ரீத் கௌர் கிள் இதை கண்டித்து, “பெண்களுக்கு எதிரான வன்முறை, அதிலும் இன வெறியுடன் கூடிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் கவலைக்குரியது,” என்று குறிப்பிட்டார். கடந்த செப்டம்பர் மாதம், அதே வெஸ்ட் மிட்லாந்த்ஸ் போலீசின் கீழ் உள்ள ஓல்ட்பரி பகுதியில் சிக் பெண் ஒருவர் இன அடிப்படையிலான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார். அந்தச் சம்பவம் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை டேம் சாலையில் நடந்தது. இரண்டு ஆண்கள் குற்றவாளிகள் எனக் கூறப்பட்ட நிலையில், போலீசார் சிலரை கைது செய்த பின்னர் பிணையில் விடுதலை செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் அதேபோன்ற தொடர்ச்சியான தாக்குதலாக இருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இரண்டு வழக்குகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து பார்க்கும் சாத்தியம் இதுவரை இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.