ஆந்திரா மாநிலத்தில்  மதுபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலபூடி கங்கராஜு என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன் பல்லாளம்முடன் காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கங்கராஜு தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி, மனைவியை அடிக்கவும், வழக்கமான குடும்ப வன்கொடுமைகளையும் செய்து கொண்டிருந்தார். கடந்த தீபாவளி தினத்தில், பட்டாசுகளுக்காக அளித்த பணம் தொடர்பாக ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியது.

அந்த இரவு 11 மணியளவில் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய கங்கராஜு, மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தன்னிடம் இருந்த கூரிய கத்தியை எடுத்து, கழுத்தில் வெட்ட முயற்சித்துள்ளார். தலையை விலக்க முயற்சித்த பல்லாளம்மின் இடது கண் மீது கத்தி பாய்ந்ததால், அது வாயிலூடாக வெளியே வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அமலாபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தீபாவளி விடுமுறை காரணமாக அங்கு மருத்தவர்கள் இல்லாததால், காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு காலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற  சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் கத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. தற்போது பல்லாளம்மின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பல்லாளம்மின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் கங்கராஜு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சாதாரண குடும்ப தகராறு இவ்வளவு கொடூரமாக மாறியிருப்பது அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், ஊரில் பெரும் உணர்ச்சிகரமான விவாதத்தையும் உருவாக்கியுள்ளது