த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டின் மூலம் த.வெ.க.வின் அரசியல் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. இதனையடுத்து கட்சியின் அரசியல் நடவடிக்கைகள், பொதுமக்களிடையிலும், அரசியல் வட்டாரங்களிடையிலும் பரவலாக பேசப்படும் தலைப்பாக மாறின.
பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் தனது குழுவின் மூலம் நடத்திய கருத்துக்கணிப்பில், த.வெ.க.வுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் இருப்பதாகத் தெரியவந்தது. தொடர்ந்து, கடந்த மே மாதம் மும்பையில் உள்ள ஒரு பிரபல சர்வே நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 95 முதல் 105 இடங்கள் வரை வெல்லும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த முடிவுகள் அரசியல் கட்சிகளின் கவனத்தை த.வெ.க. பக்கம் திருப்பியதோடு, சமூக வலைதளங்களிலும் விஜயின் செல்வாக்கு குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பின. இதையடுத்து விஜய், த.வெ.க.வின் 2-ம் மாநில மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி மதுரையில் நடத்தினார். அந்த மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டம் மற்றும் விஜயின் உரை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன்பின், விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத் திட்டத்தை அறிவித்து, முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார நிகழ்வுகளில் திரண்ட பெரும் கூட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது.
இதேபோல், மூன்றாம் கட்டமாக கரூரில் விஜய் பிரசாரம் நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் தமிழகமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், த.வெ.க.வின் மக்கள் ஆதரவு குறைந்ததா என்ற கேள்விக்கு பதில் காணும் வகையில், ஒரு பிரபல அரசியல் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சமீபத்தில் மாநிலம் முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கருத்துக்கணிப்பு முடிவில், கரூர் சம்பவத்தால் விஜயின் மக்கள் செல்வாக்கு பாதிக்கப்படவில்லை என்றும், தற்போதைய நிலையில் த.வெ.க.வுக்கு 23 சதவீதம் வரை பொதுமக்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
