தமிழக சட்டசபையில் இன்று கரூர் துயரம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி 39 பேரின் உடலுக்கும் அவசரமாக பிரேத பரிசோதனை செய்வது ஏன் எனவும் விஜயின் கூட்டதிற்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிந்தும் குறுகிய அளவிலான இடத்தை ஒதுக்கியது ஏன் எனவும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் துயரத்திற்கு நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் காரணம் என்று கூறியதோடு கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் நடந்ததாகவும் கூறினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். மேலும் அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
