கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது: “ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தை நாடிய பிறகே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அதே இடத்தை இப்போது தி.வெ.க.க்கு அரசு ஏன் வழங்கியது? அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு கொடுத்ததாக மக்களிடையே சந்தேகம் நிலவுகிறது,” என்றார்.
“கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் கருத்து தெரிவித்த பின் முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என கேட்டோம். கரூரில் உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; மக்களுக்காகவே பேசுகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “த.வெ.க. தலைவர் இதற்கு முன் நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தியுள்ளார். அங்கு எவ்வளவு மக்கள் பங்கேற்றார்கள் என்பதை உளவுத்துறை, காவல்துறை, அரசே நன்கு அறிவது. அதற்கேற்றவாறு இடம் ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் அது செய்யப்படவில்லை.” “அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது சந்தேகத்தை எழுப்புகிறது. உடற்கூறு ஆய்வு நடைபெற்ற விதமும் கேள்விக்குறி. உண்மை சம்பவத்தை மறைக்க அரசு முயல்கிறது. அந்த ஆணையம் முறையாக செயல்பட தேவையான ஆதரவு வழங்கப்படவில்லை,” என குற்றம்சாட்டினார்.
“கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறுகிறார்; ஆனால், 660 பேர் பாதுகாப்பில் இருந்ததாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு உள்ளது. இதனால் கரூர் சம்பவத்தில் அரசின் மீதான சந்தேகம் மேலும் வலுப்படுகிறது,” என்றார்.
மேலும் “த.வெ.க. தலைவர் தனது கூட்டத்தில் பத்து நிமிடமே பேசியுள்ளார். அப்போது ஒரு செருப்பு மேடையில் விழுந்தது. இவை பற்றிச் சட்டமன்றத்தில் பேசினால் பதிவு நீக்கப்படுகிறது. அதனால், மக்களுக்கு உண்மையை தெரிவிக்க ஊடகங்கள் வாயிலாகவே பேச வேண்டியுள்ளது,” எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
