ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் நகரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், வேலை வாய்ப்பின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட 45 வயதுடைய பெண் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு, அவரது வெள்ளி கொலுசுகள் திருடப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பமன்வாஸ் அருகிலுள்ள சிடோடா கிராமத்தைச் சேர்ந்த கமலா தேவி என்பவர், அக்டோபர் 8ஆம் தேதி மருமகள் சீமா மற்றும் பக்கத்து வீட்டுக்காரருடன் வேலைக்குச் சென்று இருந்தார். குற்றவாளி ஒருவர், தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு என கூறி கமலா தேவியை தனியாக அழைத்துச் சென்று, பிறகு கடத்தி கொடூரமாக தாக்கியதோடு, கூரிய ஆயுதம் மூலம் அவரது இரண்டு கால்களையும் துண்டித்து, 1.5 கிலோ வெள்ளி வளையல்களைத் திருடி உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மருமகள் சீமா, பலமுறை அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததைத் தொடர்ந்து, சதார் காவல் நிலையத்தில் கடத்தல் வழக்குப் பதிவு செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி காலை கங்காபூர் அருகே உள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றில், இரத்த வெள்ளத்தில் கிடந்த கமலா தேவியை பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.

“>

 

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, நிலையில் தீவிரம் காரணமாக ஜெய்ப்பூருக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூரச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் பெனிவால் நேரடியாக விசாரணையை பொறுப்பேற்று, சிறப்பு காவல் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தொழில்நுட்ப ஆதாரங்களை கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சந்தேகநபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளியை பிடிக்க தனிப்படை தேடுதலில் ஈடுபட்டுள்ளது.