ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பன்னி திருவிழாவின் போது, தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற மத நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையே தடி சண்டை வெடித்ததில்,  இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்னூலின் பிரபலமான மாலா மல்லேஸ்வர சுவாமி கோவிலில் தசரா பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பன்னி ஜெயத்ரயாத்திரையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நள்ளிரவில், சுவாமி மற்றும் பார்வதி தேவியின் சிலைகளை பக்தர்கள் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தபோது, இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சடங்கு வடிவமான தடி சண்டை மிகவும் மோசமான ரீதியில் சென்றது.


இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பலர் தலையில் காயமடைந்தனர். அவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மூத்த போலீசாரும், பல்வேறு அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினர். திருவிழாவிற்காக முன்னோக்கி சுமார் 800 போலீசாரை அமர்த்தியிருந்ததாலும், மேலும் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பன்னி திருவிழா என்பது, மாலா மல்லேஸ்வர சுவாமி மற்றும் மல்லம்மா தேவியின் திருமணத்தை சின்னமாகக் கொண்டாடும் முக்கிய நிகழ்வு. இதில், பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, மரத்தடிகளை (தடிகள்) கொண்டு சடங்கு சண்டையில் ஈடுபடுவார்கள். இந்த சடங்கு, நன்மை தீமையை வெல்வதைக் குறிக்கும் வகையில் நடை பெறுகிறது. சமீபத்திய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. பொதுமக்கள், இந்த வகை திருவிழாக்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரமாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.