உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில், சமூக வலைதளத்தில் ஆயுதத்துடன் புகைப்படம் பதிவேற்றியதாகக் கூறப்படும் ஆசிஃப் என்பவரை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது அவரது குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆசிஃப்பின் குடும்பத்தில் இரு பெண்கள் காவலர்களைத் தாக்குவதும், அவர்களின் சீருடையைக் கிழிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் இரு காவலர்கள் காயமடைந்தனர்.

காவல்துறையினர் ஆசிஃப்பை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது குடும்பத்தினர் திடீரென ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, காவலர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிஃப் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து, ஏராளமான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.