குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்த மணிபென் என்ற 65 வயது பெண்மணி, பால் விற்பனை மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்காமல், வெறும் பால் விற்பனை மூலம் 2024-25 ஆம் ஆண்டில் 1.94 கோடி ரூபாய் மதிப்பிலான பால் விற்று சாதனை படைத்துள்ளார்.
இவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், பால் உற்பத்தியில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தும் திறனுமே இந்த வெற்றிக்கு காரணம். மணிபென் தற்போது 3 கோடி ரூபாய் மதிப்பிலான பால் விற்பனை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறார். குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, மணிபென்னின் இந்த சாதனையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மணிபென் ஒரு நாளைக்கு 11,100 லிட்டர் பால் வழங்கும் அளவுக்கு தனது பால் உற்பத்தியை உயர்த்தியுள்ளார். 2011இல் 10 எருமைகள் மற்றும் 12 பசுக்களுடன் தொடங்கிய இவரது பயணம், தற்போது 230-க்கும் மேற்பட்ட கால்நடைகளாக விரிவடைந்துள்ளது. இவரது பண்ணையில் இருந்து 3,47,000 லிட்டருக்கும் அதிகமான பால் 2024-25இல் விற்பனையாகியுள்ளது.
மணிபென்னின் இந்த வெற்றிப் பயணம் 16 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, அவர்களை சுயசார்பு நோக்கி வழிநடத்துகிறது. மேலும், 100 எருமைகளை கூடுதலாக வாங்கி பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். குஜராத்தில் கூட்டுறவு துறையில் முன்னோடியாக திகழும் இந்த மாநிலத்தில், மணிபென்னைப் போன்ற பெண்களின் வெற்றி சமூகத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது.
