இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், மணாலியில் மழையால் பாதிக்கப்பட்ட பத்லிகுஹல் பகுதியைப் பார்வையிடச் சென்றார்.

அங்கு அவர் சென்றபோது, உள்ளூர் மக்கள் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “கங்கனா திரும்பிப் போ” என்று முழக்கமிட்ட மக்கள், கருப்புக் கொடிகளைக் காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கங்கனாவுடன் வந்த பாஜக தலைவர்களும் மற்றவர்களும் மக்களை சமாதானப்படுத்த முயன்றபோது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், காவல்துறை தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்கு முன்பு, கங்கனா ரணாவத் மணாலியின் சோலாங் மற்றும் பல்சான் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி, நிலைமையை ஆய்வு செய்தார். பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கோவிந்த் சிங் தாக்கூர் மற்றும் உள்ளூர் மக்கள், அவருக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பிற சேதங்கள் குறித்து விளக்கினர்.

ஆபத்தில் உள்ள 15-16 வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதாக கூறினார். மேலும், சோலாங் கிராமம் முழுவதும் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளதாகவும், பியாஸ் ஆறு கிராமம் அமைந்துள்ள மலையை அரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆற்றின் பாதையை மாற்றி, நீரை ஒழுங்குபடுத்துவதே இதற்கு தீர்வு என்று அவர் கூறினார்.