ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. போட்டிக்கு முன்பும் பின் நிகழ்ந்த சில சம்பவங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் நிகழ்வின் போது, இந்தியா, பாகிஸ்தான் கேப்டன்கள் ஒருவரையொருவர் கை கொடுத்து வரவேற்கவில்லை. மேலும், போட்டி முடிந்த பின் வழக்கமாக நடைபெறும் இரு அணிகளுக்கிடையேயான கைகுலுக்கும் மரபும் பின்பற்றப்படவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து, சென்றுவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்திய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்தார். இது பற்றி அப்ரிடி கூறியதாவது: “இந்தியாவில் இந்துக்கள் – முஸ்லிம்கள் என்ற பிரிவினையால் அதிகாரம் நிலைக்கப்படுகிறது. ஆனால், அனைவரையும் ஒருமித்தமாகக் கருதி பேசும் நல்லவர்களும் உள்ளனர். அதில் முக்கியமானவர் ராகுல் காந்தி. அவர் நல்ல மனம் கொண்டவர். பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளவர். இந்திய அரசியலில் அவரிடம் ஒருமைப்பாட்டுக்கான எண்ணம் காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் அப்ரிடியின் இந்த பாராட்டுரை அரசியல் வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவி, பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது X ( பக்கத்தில் பதிலடி உரையாக, “ராகுல் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளை! அப்ரிடியும், பாகிஸ்தான் மக்களும் ராகுலைத் தங்களது தலைவராக்கலாம்” என கேலி கலந்த விமர்சனம் செய்துள்ளார்.