புதிய குடியரசுத் துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றார். இந்த விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவிப் பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். பின்னர், துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற அறையில் அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

இதற்கு முந்தைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஏற்பட்ட காலிப் பதவிக்காக செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணியைச் சார்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பில், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். அவரைவிட 152 வாக்குகள் அதிகமாக, 452 வாக்குகள் பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். புதிய பொறுப்பை ஏற்கும் முன்னர், அவர் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியில் இருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்தியாவின் 15 வது துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.