பெங்களூருவில் வசிக்கும் தம்பதியின் 16 வயது மகளுக்கு, தனியார் பஸ்சில் பயணத்தின் போது கிளீனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது அக்காவை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்துக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து தனியாக தனியார் பஸ்சில் பெங்களூரு திரும்பியுள்ளார். அந்த பஸ்சில் ஓர் நபர் டிரைவராகவும், மற்றொருவர் கிளீனராகவும் இருந்தனர்.
சிறுமி தனியாக பயணித்ததை அறிந்த கிளீனர், இரவில் பஸ்சில் இருந்தபோது, ஜன்னலை மூடுவதாகச் சொல்லி, அவரைத் தொடும் வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி தன் தாயிடம் செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளார். பிறகு செல்போன் சார்ஜ் குறைவால் ஆஃப் ஆகியது. செல்போனை சார்ஜ் செய்யும் பொருட்டு சிறுமி அதை டிரைவரிடம் கொடுத்தார்.
சார்ஜ் ஆன பிறகு, செல்போனைப் பெற கிளீனர் அருகே சென்ற சிறுமியிடம், “முத்தம் கொடுத்தாலே செல்போன் கிடைக்கும்” எனக் கூறி, மீண்டும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், டிரைவரிடம் இருந்து செல்போனைப் பெற்ற சிறுமி, தன்னுடைய அண்ணனிடம் இந்த விவரங்களை தெரிவித்தார்.
இதையடுத்து, பஸ்சை எதிர்பார்த்து, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். பஸ் வந்தவுடன், கிளீனரை பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரி தாக்கி, ஆடைகளை கிழித்து, அரைநிர்வாணமாக வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கிளீனரை மீட்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஆரிப் கான் என்பவர் என தெரியவந்துள்ளது. அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து பஸ்சை ஓட்டிய டிரைவர், தனக்கு எதுவும் தெரியாது எனவும், தான் சிறுமியின் செல்போனை சார்ஜ் செய்ய உதவியதை தவிர, வேறு எதுவும் செய்யவில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
