உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், விவாகரத்து தொடர்பான வாக்குவாதம் வெறுப்புக்கு வழிவைத்து, கணவர் தனது மனைவியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் நடந்த இந்த கொடூர சம்பவம், வியாபாரங்கள் நடக்கும் நெரிசலான சந்தையில் நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு, நபர் தப்ப முயன்றபோதும், போலீசார்அவரை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் விஸ்வகர்மா சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அவரது மனைவி மம்தா சவுகான் (வயது 32). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், 13 வயது மகளும் உள்ளார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மம்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மகள் அவருடனே தங்கிவந்துள்ளார்.
மம்தா, விவாகரத்துக்கு முன்பு, குழந்தையின் பாதுகாப்பும், விவசாய நிலத்தின் உரிமையும் குறித்து கோரிக்கை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாள், தம்பதி இருவரும் சந்தையில் ஒரு புகைப்பட ஸ்டூடியோ அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாதம் முற்றிய நிலையில், விஸ்வகர்மா திடீரென துப்பாக்கியை எடுத்து மம்தாவை நோக்கி இரண்டு முறை சுட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
உள்ளூர் மக்கள் காயமடைந்த மம்தாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அப்போது மருத்துவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவத்துக்குப் பிறகு, தாயை இழந்த 13 வயது மகள் நேரில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது தந்தை தாயை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அவருக்கு திருமணத்திற்கு புறம்பான உறவுகள் இருந்ததாகவும் சாட்டியுள்ளார்.
விசாரணையின் போது, விஸ்வகர்மா, “மனைவி என் சம்பளத்தை வாங்கி கொண்டு வாழ்ந்தார். அவரைக் கொன்றதில் வருத்தம் இல்லை” என்று கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
