ஆந்திர மாநிலம் அனக்கப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவர கிளை சிறையில், வார்டனை தாக்கி, இரு சிறை கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனக்கப்பள்ளி மாவட்டம் சோடவரத்தில் அமைந்துள்ள கிளை சிறையில், தண்டனை மற்றும் விசாரணை நிலையிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இச் சிறையில் வீரராஜு என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

இந்தச் சிறையில், ஓய்வூதிய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிக்குமார் மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெஜவாடா ராமு ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம்  மாலை, ஜெயிலின் நுழைவாயில் பகுதியில் வார்டன் வீரராஜு இருந்தபோது, சினிமா பாணியில் சத்தமின்றி செயல்பட்ட இரு கைதிகளும், சுத்தியலால் அவரது தலையில் சரமாரி தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வீரராஜு, மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவரது ஜெயில் சாவியை எடுத்து, கைதிகள் முன் வாயில் வழியாக சிறையைத் திறந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கைதிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சிறையிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி, இந்த தப்பிச் செல்லும் சம்பவம் குறித்து பல்வேறு வலைத்தளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

சிமேலும் றை நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு தளர்வுக்கு காரணம் என்ன?, கைதிகள் வெளியே சென்ற வழி, முன்னெச்சரிக்கைக் குறைபாடு போன்ற விசயங்களில் உயர் மட்ட விசாரணை தேவைப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் கருத்துகள் வெளிப்படுகின்றன.