திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (26) ஜே.சி.பி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காந்தாமேரி (25), மூன்று வயது மகள் லோகேஸ்வரி மற்றும் 8 மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். குடும்பத்துடன் காந்தாமேரியின் தாயார் சொர்ணா (50) கூட இருந்துள்ளார்.

நேற்று மாலை, மூத்த மகளை பால்வாடியில் இருந்து அழைத்து வரக் கிளம்பிய காந்தாமேரி, வீடு திரும்பியபோது அதிர்ச்சி ஏற்பட்டது. ஹாலில் இருந்த தண்ணீர் வாளிக்குள் 8 மாத குழந்தை தலைகுப்புற விழுந்த நிலையில் காணப்பட்டதால், அதனை உடனடியாக மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த துயர சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கவனித்து வந்த சொர்ணா, தூங்கிய நேரத்தில் குழந்தை தவறி விழுந்ததாகத் தெரிவித்துள்ளார். குழந்தையின் மரணம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.