திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) தரிசனம் செய்ய வருகை தரும்  நிலையில், கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர் இறங்குமிடத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியிலும், கோவில் வளாகத்தின் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பிச்சைக்காரர்களை வெளியேற்ற போலீசார் நேற்று நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ஈரோட்டைச் சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவர் வெளியேற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, 2 போலீசார் அவரை அடித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

தாக்கப்பட்ட முதியவர் கடந்த ஒரு வருடமாக கோவிலில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் பிச்சைக்காரர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை இடைநிறுத்தி, மாற்றாக அவர்களை நலமுடன் வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

இந்த தாக்குதல்  தொடர்பாக சம்பவ தகவலை அறிந்த திருச்சி மாநகர காவல் கமிஷனர் காமினி, தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரை பணியிடைநீக்கம் செய்து, விசாரணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.