தமிழக மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஆக.30) அனுசரிக்கப்பட்டது.
சென்னையின் தேனாம்பேட்டை நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷும் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
NDA கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுதீஷின் வருகை, “பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைகிறதா?” என்ற கேள்வியை எழ வைத்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நட்பின் காரணமாகவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்” என சுதீஷ் பதிலளித்தார்.
முன்னதாக பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்தது. பின்னர், சமீபத்தில் தி.மு.க.வுடன் நட்புறவை பேணி வருகிறது.
இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி சேரப்போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் குழப்பம் நிலவுகிறது.
“கூட்டணி தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் வெளியிடப்படும்” என்று பிரேமலதா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தேர்தலிலும் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவு எடுக்கும் தே.மு.தி.க.வின் இந்த நடைமுறை, அரசியல் எதிர்ப்பார்ப்புகளையும், குற்றச்சாட்டுகளையும் அதிகரித்துள்ளது.
