திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாடுவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். “காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலையும் காண முடியவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இத்தகைய மாநாடு நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போரால் மரங்களின் மாநாடு நடத்த முடியாது” என அவர் தொடக்கத்தில் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, “தண்ணீரை விற்றவர்கள், நாளை காற்றையும் விற்கக் கூடும். டெல்லியில் போல, தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலை வரலாம். காற்று மாசுபட்டு போனதா, அல்லது நாம் காற்றை மாசுபடுத்தி விட்டோமா என்பதை சிந்திக்க வேண்டும்.
மரங்கள் வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணி செய்து வருகின்றன. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். மரம் நம் அன்னை, நம் தாய்.. ” என அவர் கூறினார்.
மேலும், “மரங்கள் அழிக்கப்பட்டதால் பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ளது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை;
புயல் மழை மட்டுமே. பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, அதை தாங்க முடியாமல் கடல் கொந்தளிக்கும். அதன் தாக்கத்தில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு சுனாமியையே கடந்த காலத்தில் நாம் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால் பூமி பேரழிவை சந்திக்கும்” என எச்சரித்தார்.
